திருவள்ளூரில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் :

பதிவு:2022-08-14 00:07:44



திருவள்ளூரில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் :

திருவள்ளூரில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வகித்தார்.அப்பொழுது அமைச்சர் தெரிவித்ததாவது :

மிக குறுகிய காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், காவல்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு எற்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இளைஞர்கள் போதை பொருட்களை தேடி செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. போதை பொருட்களை பயன்படுத்துவதால் மனநலம் பாதிப்பதோடு, சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் மீது Compund Offence என்னும் தலைப்பின்கீழ் நமது அரசு பொறுப்பேற்றது முதல் 2022 ஜூன் மாதம் வரை ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா விற்பனை செய்த 75 கடைகளுக்கு Emergency Prohibition Order என்ற அடிப்படையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தால் ரூ. 58.22 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநில எல்லைப்புற சோதனைச் சாவடிகளை வலுப்படுத்திட வேண்டும். பயணிகள் மூலமாகவும் கூரியர் வழியாகவும் போதைப் பொருள் வருவதாகச் சொல்லப்படுகிறது. பயணிகள் பேருந்துகள், ரயில்கள் கண்காணிக்கப்பட வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு இது குறித்த எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பி கண்காணிக்க வேண்டும்.கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆயத்தீர்வைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, புலனாய்வுத் துறை, சுங்கத்துறை, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களைச் சமூகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகம் நடைபெறும் இடங்களை பட்டியலிட்டு, அங்கு கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைக் கண்காணிக்க வேண்டும். வார்டன்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும். போதைப் பொருள் தொடர்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கக்கூடிய வகையில் தனியாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கி அந்த எண்ணை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள் குற்றங்களைச் செய்தவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்ய வேண்டும். போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரிடைய போதை பொருள் தீமைக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ச.சந்திரன் (திருத்தணி), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.