திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் "நம்ம ஊரு சூப்பரு" பிரச்சாரம் குறித்து விளக்கம்

பதிவு:2022-08-16 14:26:58



திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் "நம்ம ஊரு சூப்பரு" பிரச்சாரம் குறித்து விளக்கம்

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

திருவள்ளூர் ஆக 16 : சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஏகாட்டூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கலந்துக்கொண்டு, பொதுமக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்து, கருத்துகளை வழங்கினார்.

இந்த 75 ஆண்டுகளை கடந்த சுதந்திர தினம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. இதற்கு முன்பெல்லாம் தேசிய கொடியை பயம் கலந்த மரியாதையுடனும் தான் பார்ப்போம். முதன் முதலாக இப்பொழுது தான் ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுகிறோம். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலும் ஒரு புது பிரச்சாரம் ஆரம்பிக்கிறோம்.

அதாவது “நம்ம ஊரு சூப்பர், எங்க ஊரு ஏகாட்டூர்” என்ற அடிப்படையில் நம்ம ஊரு சூப்பராக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியதை நாமும், ஊராட்சி செய்ய வேண்டியதை ஊராட்சியும், அரசு செய்ய வேண்டியதை அரசும் செய்ய வேண்டும். இவ்வாறு இணைந்து பணியாற்றும்போது தான் ஒவ்வொரு ஊராட்சியும் சூப்பராக இருக்கும்.

ஒவ்வொரு வீட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமி;ன்றி, சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை பொறுத்தவரை மழை நீரை நாம் சேமித்து வைக்க வேண்டும். மழை எங்கு பெய்கிறேதோ, எப்பொழுது பெய்கிறதோ அப்போது அதை நாம் சேமித்து வைக்க வேண்டும். அதற்காக நம் வீடுகளில் மழை குழிகள் என பல்வேறு அரசு திட்டங்கள் சார்பாக செயல்பட வேண்டும். மேலும், சின்ன சின்ன ஊரணிகள் உள்ளது. கிராமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஊரணிகளை மேம்படுத்துவதற்காக முன்னுரிமை அடிப்படையில் செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி அரசுடனும், பஞ்சாயத்துடனும் சேர்ந்து பெரிய ஊரணிகள் இருந்தால் அதையும் நாம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஏகாட்டூர் ஊராட்சி ஒரு சூப்பர் ஊராட்சியாக மாறுவதற்கான முன் முயற்சியை எடுக்க வேண்டும். அந்த முயற்சியில் ஊராட்சிமன்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுமக்களாகிய உங்கள் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதன் காரணமாக உங்கள் ஊராட்சி மட்டுமின்றி நமது மாவட்டமும் முதுன்மை மாவட்டமாக திகழ்ந்து மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக அமையும் என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கலந்தாய்வில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவது குறித்தும், சுகாதாரம் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்வது குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்தும், ஜல் ஜீவன் திட்டம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் குறித்தும், ;பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும், பொறுப்பு துறைகள் குறித்தும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு; குறித்தும், வறுமை குறைப்பு திட்டம் குறித்தும், இளைஞர் திறன் திருவிழா குறித்தும், வேளாண் உழவர் நலத்துறை குறித்தும், குழந்தைகள் அவசர உதவி எண் மற்றும் முதியோர் உதவி எண் குறித்தும், இதர பொருட்கள் குறித்தும் என 16 பொருண்மைகள் குறித்தும் பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டு கருத்துக்கள் கேட்டு, கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, சார் ஆட்சியர் (திருவள்ளூர்) ஏ.பி.மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.மு.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம்,ராம்குமார், ஏகாட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் கு.ராஜேந்திரன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.