பதிவு:2022-08-25 10:59:47
சின்னம்பேடு சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : அமைச்சர்கள் பங்கேற்பு :
திருவள்ளூர் ஆக 23 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நிகழ்வில் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிக்காக 11.07.2022 அன்று காலை பந்தகால் நடும் பணி நடைபெற்றது. இத்திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றது. முருகம்மையார் எனும் அடியாருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்த சிறப்பு மிக்க தலமாகும்.
திருக்கோயில் முழுவதும் பழுதுபட்டு சிதிலமடைந்து காணப்பட்டது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இத்திருக்கோயிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் துவக்கப்பட்டது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் ஆகிய திருப்பணிகள் சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆவணி 1 ஆம் தேதி 17.08.2022 முதல் ஐந்து நாட்கள் யாகசாலைகள் பூஜைகள் நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செய்தது. அதனைத் தொடர்ந்து, பெரியபாளையம் அருகே 19 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
கோயில் வளாகத்தை சுற்றிலும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகள், கார் நிறுத்துமிடம், போலிசாரின் பாதுகாப்பு குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியா, ஊத்துக்கோட்டை எஸ்பி, கோயில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கும்பாபிஷேகத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, இந்து சமய அறநிலையத்துறை (வேலூர்) இணை ஆணையர் சி.லட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.