பதிவு:2022-03-30 08:30:50
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மார்ச் 30 காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 373 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் 71 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கடந்த 21-ந் தேதி அன்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்களில் ஒரு நபருக்கு ரூ.9,500 மதிப்பில் மூன்று சக்கர வண்டியும், 3 நபருக்கு ரூ.3,700 மதிப்பில் காது கேட்டும் கருவியும் மொத்தம் ரூ.20,600 மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ஆர்.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 2021 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாங்கி கிராம ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தலின்போது பணியில் ஈடுபட்டிருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், நெய்க்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஹரி இறந்ததால் அவரது மனைவி நளினிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.