பதிவு:2022-03-31 11:31:49
திருவள்ளூரில் முதலாவது புத்தக கண்காட்சிக்கான அரங்கம் அமைக்கும் பணிகள் :
திருவள்ளூர் மார்ச் 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலாவது புத்தக கண்காட்சியை முன்னிட்டு புத்தக கண்காட்சிக்கான அரங்கம் அமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட புத்தக கணக்காட்சி குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி 01.04.2022 முதல் 11.04.2022 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுப்பசியை தீர்க்கும் வண்ணம் புத்தக கண்காட்சியை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு புத்தக கண்காட்சி நடத்திட வலியுறுத்தியதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில் ஏறக்குறைய ஒரு இலட்சம் புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இப்புத்தக கண்காட்சியில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வரையிலான தலைப்புகள் கொண்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. நாள்தோறும் ஒரு தலைச்சிறந்த தமிழ் சொற்பொழிவாளர்களால் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். அறிவுப்பசியை தீர்ப்பதற்கு பல அறிஞர்கள், பல எழுத்தாளர்கள் தீட்டிய காவியங்கள், ஓவியங்கள் இந்த புத்தக கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் இங்கு வந்து பல அறிஞர்கள், எழுத்தாளர்களின்; காவியங்கள், ஓவியங்கள் அடங்கியுள்ள புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும் என்று கூறினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் ,ச.சந்திரன் (திருத்தணி),துரை சந்திரசேகர் (பொன்னேரி),மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.