பதிவு:2022-08-25 12:12:59
புதிய அலமாதியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்து சமூக விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, புதிய அலமாதி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களிடையே சமுதாயத்தில் காணப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற Collector@School என்ற சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனை வழங்கி பேசினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு சில பள்ளிகளில் இது போன்ற பழக்கங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆகையால், மாணவர்களாகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான சம்பவம் உங்கள் கவனத்திற்கு வந்தால் ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், உங்கள் பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு போன்ற சம்பவம் தெரிந்தால் காவல் துறையினர் அல்லது உங்கள் ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வேற எந்த பிரச்சனையாக இருந்தாலும் நீங்கள் உங்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த வளரிளம் பருவத்தில் எந்தவித தவறான நடவடிக்கைகளுக்கும் தங்களை ஆட்படுத்திக்கொள்ளாமல் ஒழுக்கமுள்ள மாணவர்களாகவும் ஒவ்வொரு மாணவர்களும் ஒழுக்கத்துடன் கூடிய கடின முயற்சி மேற்கொண்டால் எத்தகைய இலக்கையும் அடைய முடியும் என்பதனை ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் உணர்ந்து செயல்பட்டால் சமுதாயத்தில் போற்றக்கூடிய நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.
அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுபவர்களைவிட ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பால் வெற்றி பெறுபவர்களே வாழ்வில் சாதித்துள்ளார்கள். நமக்குள் இருக்கின்ற திறமைகளை கண்டறிந்து முயல வேண்டும். நாம் என்னவாக வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். வாழ்வில் நல்ல முடிவுகளை எடுத்தால் நல்லதொரு வாழ்வு அமையும். தவறான முடிவுகள் எடுத்தால் வாழ்க்கையில் மோசமான நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதை உணர்ந்து ஒவ்வொரு மாணவ, மாணவியரும் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற கலந்துரையாடலில் மாணவர்களிடையில் உடல் நலம் மற்றும் மன நலத்தின் முக்கியத்துவங்கள் குறித்து பான்யன் தொண்டு நிறுவன அறக்கட்டளை நிர்வாகியும், மனநல மருத்துவருமான டாக்டர்.அன்பு துரை அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட வளரிளம் பருவத்தினரின் கடமைகள் குறித்து துளிர் தொண்டு நிறுவன நிர்வாகி திருமதி.வித்யா எடுத்துரைத்தார்.இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ஜெகதீசன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.