பதிவு:2022-08-26 18:17:39
திருவள்ளூர் அருகே காதல் திருமணம் செய்து கைவிட்ட கணவன் கைது :
திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரது மகள் திவ்யா (26) என்பவர் ஈக்காடு பகுதியில் உள்ள காயலான் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் தூத்துக்குடி மாவட்டம் தென்திருபேரை கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேலு என்பவரது மகன் சிவனைந்த பெருமாள் (29) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் திவ்யாவும் சிவனைந்த பெருமாளும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். அதனால் கடந்த 24.2.2021-ல் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டில் திவ்யாவுக்கு பெற்றோர் முன்னிலையில் சிவனைந்த பெருமாள் தாலி கட்டி குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து தூத்துக்குடியிலேயே மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளான் சிவனைந்த பெருமாள். இந்நிலையில் திவ்யா இருளர் இனத்தை சேர்ந்த பெண் என்பது கணவன் குடும்பத்தாருக்கு தெரியவருகிறது.
இதனால் திவ்யாவை வீட்டில் சேர்க்க மாட்டோம் என கணவர் வீட்டில் தெரிவித்ததால் வீட்டு மொட்டை மாடியில் வெயிலிலும், மழையிலும் நனைந்த படி தங்கியுள்ளார். கணவர் சிவனைந்த பெருமாள் சாப்பாடு கொடுத்துவிட்டு செல்வார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஆழ்வார்திருநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கவுன்சிலிங்கும் செய்தனர்.
ஆனால் ஒரு சில நாட்களில் சிவனைந்த பெருமாள் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்தவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மாமியார் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்துவதாக கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தண்ணீர்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார். இது குறித்து திவ்யா திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி சென்று சிவனைந்த பெருமாளை கைது செய்து பெண்ணை வன்கொடுமை செய்த சட்டத்தின் கீழ் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.