பதிவு:2022-08-27 15:13:27
கிருஷ்ணசமுத்திரம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 847 பயனாளிகளுக்கு ரூ.46.60 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண் - உழவர் நலத்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக 847 பயனாளிகளுக்கு ரூ.46.60 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி பேசினார்.
தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி வட்டத்தில் இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
முதல்வரின் முகவரி என்ற திட்டத்தில் சிறப்பாக பொதுமக்களுடைய கோரிக்கைகளை தீர்வு கண்டதற்காக நம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளின் கடின உழைப்பினால் நம் மாவட்டத்திற்கும் ஒரு விருது பெறப்பட்டது. அப்படியிருக்கும்போது, தற்பொழுது மக்களுடைய கோரிக்கைகளை இந்த கிராமத்திலேயே வந்து கோரிக்கைகளை கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண்பதற்காக இந்த மாதிரியான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது.
இன்றைக்கு 847 பயனாளிகளுக்கு ரூ.46.60 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகள் கொண்டு வந்திருக்கிறீர்கள். இன்றைக்கு கொடுக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்படும். மேலும், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்வத்பேகம், திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் தங்கராஜ், திருத்தணி வட்டாட்சியர் ஜி.வெண்ணிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.