பதிவு:2022-08-29 16:20:40
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஆக 29 : இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்; பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் 01.08.2022 முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விபரங்களை படிவம்-6B-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர். இப்பணியினை மேற்பார்வையிட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இப்பணியினை கண்காணித்திட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6B மூலம் தெரிவித்துக்கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து படிவம்-6B-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். மேலும், வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது playstorey voters helpline- ஐ பதிவிறக்கம் செய்தோ வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம்.
இப்பணியானது வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது. எனவே, மேற்படி பணியினை சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பினை நல்கிடுமாறு திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.