பதிவு:2022-08-29 16:33:42
பூவிருந்தவல்லியில் ரூ.1.50 கோடி மதிப்பில் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியின் கூடுதல் தளங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஆக 29 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 65.60 கோடி ரூபாய் செலவில் இம்மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள 6 தளங்கள் கொண்ட இருநூறு நூற்றாண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், 63.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவத்துறைக் கட்டடங்களை திறந்து வைத்து, 65.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவச் சேவை வண்டிகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பொது சுகாதாரத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 76 மருந்தாளுநர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 திறன்மிகு உதவியாளர் நிலை-II மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் கருணை அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர், ஒரு ஊர்தி ஓட்டுநர், என மொத்தம் 236 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியின் 2-வது மற்றும் 3-வது தளங்கள் திறந்து வைத்து, நவீன மருத்துவ கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கிய நிகழ்ச்சியை நேரலையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் தொலைக்காட்சி மூலமாக பார்வையிட்டனர்.
இதில் திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்திலிருந்து பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளுர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கு.ரா.ஜவஹர்லால், பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் வ.நாராயணன், செவிலியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் மகேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.