பதிவு:2022-08-30 23:03:07
திருவள்ளூர் நகாராட்சி முழுவதும் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய எல்இடி பல்புகள், குப்பைகளை அகற்றியும், மழை நீர் கால்வாய் தூர்வாரியும் நடவடிக்கை :முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோருக்கு திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் நன்றி தெரிவித்தார்
திருவள்ளூர் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர் மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர் மன்றத் துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
இக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும் போது திருவள்ளூர் நகராட்சியில் இதுவரை இல்லாத வகையில் நகராட்சி எல்லைப்பகுதியான சுங்கச்சாவடி முதல் வெங்கத்தூர் ஊராட்சி எல்லை ஆரம்பம் வரை புதிய எல்.இ.டி., பல்புகள், பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக அமைத்தல், உயர் கோபுர மின் விளக்குகள் அனைத்தையும் மீண்டும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டது. திருவள்ளூர் நகராட்சி முழுவதும் ரூ.70 லட்சம் மதிப்பில் கிட்டத்தட்ட 90 சதவிகித புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டதால் இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் மிளிர்கிறது என்று தெரிவித்தார்.
அதே போல் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பள்ளி மாணவ மாணவிகள் மூலம் ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தியும், நகராட்சி நிர்வாகத்துடன் பொது மக்களும் இணைந்து குப்பையில்லாத நகரமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனால் குப்பையில்லாத நகரமாக திருவள்ளூர் நகரம் தற்போது விளங்கி வருகிறது.
அதே போல் மழைக் காலங்களில் கழிவு நீரோடு மழை நீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் கழிவு நீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரி சீர்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். நகர்மன்றத் தலைவரான குறுகிய காலத்தில் திருவள்ளூர் நகரின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு நல்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசருக்கும், திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோருக்கும் நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 3 வது வார்டு உறுப்பினர் சுமித்ரா வெங்கடேசன் பேசும் போது, தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஆங்காங்கே இருப்பதாகவும் அதனை தீர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
11-வது வார்டு உறுப்பினர் வி.இ.ஜான் பேசும் போது, வெள்ளியூரில் இருந்து வரும் நீரை தனது வார்டு மக்களுக்கு வழங்க பைப் லைன் அமைக்க நடவடிக்கை எடுத்த நகர்மன்றத் தலைவருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதாவது திருவள்ளூர் நகர மக்களின் குடிநீர் தேவைக்காக வெள்ளியூரில் இருந்து வரும் நீரை வழங்கி வந்தனர். ஆனால் அந்த நீரை 11-வது வார்டு மக்களுக்கு மட்டும் இந்த குடிநீர் வராமல் இருந்தது. இதனையடுத்து நகர் மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு முதல் நகர்மன்ற கூட்டத்தொடரில் பேசும் போது இந்த கோரிக்கையை நகர்மன்றத்திடம் வைத்துள்ளார். அதனை மிக குறுகிய காலத்தில் வெள்ளியூர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
23-வது வார்டு உறுப்பினர் சி.ஆனந்தி சந்திரசேகர் பேசும் போது, வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள பூங்காவை சீரமைத்து தரவேண்டும் என்றும், பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்காதவர்களை இணைப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நகர்மன்ற சாதாரணக் கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜூ, சுகாதார ஆய்வாளர் சுதர்சன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.