பதிவு:2022-08-31 16:08:36
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று வழிபாடு :
திருவள்ளூர் ஆக 31 : இந்துக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமானது இந்த விநாயகர் சதுர்த்தி விழா. முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமாக விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்ரு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 31-ந் தேதியான இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடாமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதித்ததால் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான வடிவங்களில், வண்ணமயமானவிநாயகர் சிலைகளை வாங்கி சென்று வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் திருவள்ளூர் மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் விநாயகருக்கு பிடித்தமான அவல், பொரி, ஆப்பிள் பழம், ஆரஞ்சு பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கம்பு கதிர், மக்காச்சோளம், கரும்பு, படையலுக்கு தேவையான எருக்கம்பூ மாலை, குருத்தோலை, மாவிலை தோரணங்கள், வாழை இலை, தேங்காய், விநாயகர் சிலைக்கு ஏற்ற கலர் காகிதத்தால் செய்யப்பட்ட குடைகள் ஆகியவற்றையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாங்கிசென்று வீட்டில் படையல் செய்து விட்டு ஆங்காங்கே உள்ள விநாயகர் கோவில்களுக்கு பொதுமக்கள் சென்று வழிபட்டனர் .
மேலும் திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள மகா வல்லப கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர்.
அதேபோல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள வழித்துணை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூரில் இருந்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் ரயில் பயணிகள் இந்த வழித்துணை விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.
அதேபோல் காக்களூர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோவில் திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டியில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு செல்கின்றனர்.