பதிவு:2022-03-31 23:31:23
திருவத்திபுரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
செய்யாறு மார்ச் 31, திருவத்திபுரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார். நகராட்சி கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் ரூ.41 லட்சத்தில் 3 வாகனங்கள் வாங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் வாசித்து அனுமதி கோரப்பட்டது. அதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசுகையில், வார்டுகளில் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு, புதிய கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தெருக்களில் சாலைவசதி ஏற்படுத்துதல், பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய ஆணையாளர் என்.ரகுராமனுக்கு, தலைவர் உத்தரவிட்டார். ஆணையாளர் ரகுராமன் பேசுகையில் நகராட்சியில் வரி பாக்கியாக ரூ.3 கோடியே 30 லட்சம் உள்ளது. நகராட்சியின் வருவாய் ரூ.6 கோடியே 22 லட்சத்தில் ரூ.2 கோடியே 95 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது. நகராட்சி வரவேண்டிய வரி பாக்கி செலுத்தினால் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடலாம் என்றார். குடிநீர் இணைப்பை துண்டியுங்கள் அதைத்தொடர்ந்து பேசிய கவுன்சிலர் சீனுவாசன் வரிசெலுத்தாதவர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. வரிசெலுத்தாதவா்களின் குடிநீர் இணைப்பை துண்டியுங்கள். வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வையுங்கள் என்றார். தி.மு.க. கவுன்சிலர் கங்காதரனும் பேசினார். கூடத்திற்கு வெளியில் இருந்த கவுன்சிலரின் கணவர்கள் சிலர் மாறி மாறி மன்ற கூட்டத்திற்கு உள்ளே வந்து குறைகளை தெரிவித்தனர். அதற்கு கவுன்சிலரை தவிர மற்றவர்கள் உள்ளே வரவும் கூடாது, பேசவும் கூடாது என தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க கவுன்சிலர் கே.வெங்கடேசன் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேலுக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்தினார். தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. 27 கவுன்சிலர்களில் 14 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.