பதிவு:2022-09-01 14:32:52
திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரங்களுக்கான தளவாடங்கள் லாரியில் இருந்து சரிந்து காரின் மீது விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது : டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் :
திருவள்ளூர் செப் 01 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஜேசிபி இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஐந்து வகையான ஜேசிபி எந்திரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பூந்தமல்லி அடுத்த படூர் என்ற பகுதியில் இருந்து கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு கன்டெய்னர் லாரி மூலம் ஜேசிபி இயந்திரம் தயாரிப்பதற்கு தேவையான தளவாடங்களை கொண்டு வந்துள்ளனர். இந்த லாரி மணவாளநகர் பகுதியில் ஸ்பீட் பிரேக் (வேகத்தடை) மீது ஏறி இறங்கும் போது தளவாடங்கள் சரிந்து கீழே விழுந்தது.
அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது சரிந்து விழுந்ததால் அந்தக் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த காரில் எவரும் இல்லை என்பது தெரியவந்தது இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கார் உரிமையாளர் ராஜேஷ்(27) என்பவர் போரூர் அடுத்த முகலிவாக்கம் என்ற பகுதியில் இருந்து போளிவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வந்துள்ளார். அப்போது காலை டிபன் சாப்பிடுவதற்காக காரை சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும், லாரியில் தடவாளங்களை முறையாக கம்பியால் கட்டாமல் கயிற்றால் கட்டி கொண்டு வந்ததால் பாரம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த மணவாளநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுனர் டிபன் சாப்பிட சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.