பதிவு:2022-09-02 11:20:34
ஆற்காடுகுப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி :
திருவள்ளூர் செப் 02 : போதைப் பழக்கவழக்கங்களுக்கு ஏராளமான வளரிளம் பருவ மாணவர்கள் ஆட்படுகிறார்கள் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு வரப்பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக Collector@School என்ற சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டத்தில் அலமாதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், ஆற்காடுகுப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சமுதாயத்தில் காணப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற Collector@School என்ற சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்த வளரிளம் பருவ மாணவர்கள் பல்வேறு போதைப் பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி இதன் மூலம் மாணவர்களை பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்டு எதிர்கால வாழ்வை தொலைக்கின்ற நிலைக்கு இப்போதைப்பழக்கங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போதைப்பழக்க வழக்கங்களிலிருந்து நமது சமுதாயத்தை பாதுகாக்கும் வகையில் மாணவர்களாகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த மாதிரியான சம்பவம் உங்கள் கவனத்திற்கு வந்தால் ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், உங்கள் பகுதிகளில் போதைப் பொருட்களின் பயன்பாடு போன்ற சம்பவம் தெரிந்தால் காவல் துறையினர் அல்லது உங்கள் ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, போதைப்பழக்க வழக்கங்களின் தாக்கங்கள் குறித்து திருத்தணி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்,வளரிளம் பருவ குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சென்னை சமத்துவ கல்வி நிறுவன இயக்குநர் அவர்களும், சுத்தமும் சுகாதாரமும் குறித்து சானிடேசன் ஃபர்ஸ்ட் இந்தியா, திட்ட மேலாளர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், மாணவ, மாணவர்களிடையே எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக "நம்ம ஊரு சூப்பரு" என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கும் குப்பை மக்கா குப்பை என்ற விழிப்புணர்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, பார்வையிட்டார். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் த.விக்னேஷ், சென்னை சமத்துவகல்வி நிறுவன இயக்குநர் சாம் சுந்தர், சானிடேசன் ஃபர்ஸ்ட் இந்தியா பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிரி, திட்ட மேலாளர் நிஷா, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.