பதிவு:2022-09-04 23:16:34
திருவள்ளூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் கரைத்தனர்
திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி,இந்து முன்னணி விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,134 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருவள்ளூர் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மாலையில் மழை பெய்து கொண்டிருந்ததால் திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு,எடப்பாளையம், ஈக்காடு, மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30 க்கும் மேற்பட்ட சிலைகளே ஊர்வலத்தில் கலந்து கொண்டன. இந்த சிலைகள் ஊர்வலம் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த ஜெ.என்.சாலை, மோதிலால் தெரு,பஜார் வீதி வழியாக பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம்முழங்க, பக்தர்கள் ஆடல், பக்திப் பாடல்களுடன் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைத்தனர்.
களிமண்ணால் ஆன சிலைகள் ஏரிகளில் கரைப்பதற்கு சிரமமில்லாமல் இருந்தாலும் ஒரு சில சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எனப்படும் இரசாயன கலவை கலந்த சிலைகளை கொண்டுவந்து நீர்நிலைகளில் கரைக்கும் போது அது கரையாமல் இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே அடுத்த முறை இதுபோன்ற சிலைகளை வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கரைக்கும் பகுதியில் ஒவ்வொரு சிலையாக கொண்டு செல்லக்கூடியதை மாற்றி நான்கைந்து சிலைகளைச் கொண்டு செல்லக்கூடிய வகையில் ஏற்பாடு செய்தால் ஏரிகளில் சிலைகளை கரைப்பது எளிதாக இருக்கும் என இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் வினோத்கண்ணா, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலா என்கிற பாலயோகி, பாஜக மாநில ஓபிசி அணி தலைவர் லோகநாதன், மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட தலைவர் அஸ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், நகர தலைவர் சதீஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா தேவி, மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு ரகு உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.