நன்னடத்தை பிணையில் வந்த குற்றவாளி மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கைது

பதிவு:2022-09-04 23:19:10



நன்னடத்தை பிணையில் வந்த குற்றவாளி மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கைது

நன்னடத்தை பிணையில் வந்த குற்றவாளி மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதால் கைது

திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (21) என்பவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று மாலை அப்பகுதியில் உள்ள மைதானத்திற்கு விளையாட சென்றார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த முகிந்தர் அமர்நாத் என்பவர் முன்விரோதம் காரணமாக ஜெயக்குமாரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் பேரம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இது குறித்து ஜெயக்குமார் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

விசாரணையில் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முகிந்தர் அமர்நாத் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை பிணைய பத்திரம் அளித்திருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் மீண்டும் தனியார் ஊழியர் ஜெயக்குமாரை தாக்கி குற்றச் செயலில் ஈடுபட்டதால் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் முகிந்தர் அமர்நாத்தை மீண்டும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.