திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார சுகாதாரப் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் :

பதிவு:2022-09-05 14:33:59



திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார சுகாதாரப் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் :

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்  வட்டார சுகாதாரப் பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் :

திருவள்ளூர் செப் 05 : திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் கோரிக்கைகள் குறித்து வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வட்டாரத்திற்குட்பட்டபகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேவைப்படும் கூடுதல் உபகரணங்கள், அடிப்படை வசதிகள் குறித்து வட்டார சுகாதாரப் பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருவள்ளூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதிநாதன் முன்னிலை வகித்தார்.

இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், மாவட்ட துணை இயக்குனர் இலட்சுமி முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திருவள்ளூர் வட்டாரத்தில் செயல்படும் வெள்ளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளியூர் துணை சுகாதார நிலையங்கள், புலியூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் , புலியூர் துணை சுகாதார நிலையங்கள், பெருமாள்பட்டு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள் , கல்யாண குப்பம் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் ஆகியவற்றிற்கு தேவைப்படும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

அதன்படி வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பல் மருத்துவப் பிரிவிற்கு எக்ஸ்ரே கருவி, எலும்பு முறிவு சிகிச்சைக்கு எக்ஸ்ரே கருவி ,குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வழங்குதல், பழைய சிதிலமடைந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 18 கோரிக்கைகளை மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே போல் வதட்டூர் கிராமத்தில் புதிதாக துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்ட ஏதுவாக கிராமத்தில் 10 சென்ட் அளவில் நிலம் ஒதுக்கி மாவட்ட ஆட்சியரிடமிருந்து நில முன் அனுமதி பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வெள்ளியூர் துணை சுகாதார நிலையங்கள் சார்பில் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித் தர கோரிக்கை விடுத்தனர். பெருமாள்பட்டு துணை சுகாதார நிலையத்தில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்திற்கு கூடுதலாக இடம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மன வளர்ச்சி குன்றிய பயனாளிகளுக்கு உதவித்தொகை தாமதமின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். கூடுதலாக வாகனங்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் பொதுவான கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

வட்டார அளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்படும் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றும், அப்போது இதற்கான தீர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் செவிலியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர். . முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மை.அந்தோணி நன்றி தெரிவித்தார்.