பதிவு:2022-09-06 17:21:54
ஊத்துக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி 3 பேர் கைது : இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலில் தீர்த்துக்கட்ட நினைத்து வந்தவரை வெட்டாமல் கூட்டாளியை கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் :
திருவள்ளூர் செப் 06 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கடந்த 31-ஆம் தேதி இரவு ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின்(26) என்ற இளைஞர் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது குறித்து திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திய நிலையில், சோழவரம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(26), சரவணன் (26) மற்றும் ராகுல்(26) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இரு ரவுடி கோஷ்டிகளுக்கும் இடையே ஏற்பட்ட பகையால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.சேதுபதி மற்றும் முத்து சரவணன் ஆகிய 2 ரவுடி கோஷ்டிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வேளாங்கண்ணியில் அபிஷேக் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்க, மற்றொரு கோஷ்டியில் உள்ளவர்களை பழி வாங்குவதற்காக திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி கடந்த 31 தேதி விநாயகர்சதுர்த்தி அன்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முத்து சரவணன் கூட்டாளியான மோகன் திருமணத்திற்கு வந்தபோது அவனுடன் ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்த ராபின் மற்றும் கமல் உள்ளிட்ட 6 பேர் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர், ஆனால் திருமண நிகழ்ச்சியிலிருந்து ராபின் மற்றும் கமல் பாதியிலிலேயே இருசக்கர வாகனத்தில் ஊத்துக்கோட்டை நோக்கி வந்துள்ளனர்.
ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்தது மோகன் என நினைத்தாகவும் விவேகானந்தா பள்ளி அருகே ராபினை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கார்த்திக், சரவணன், ராகுல், ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு நபர் தப்பித்து சென்றதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து 3 பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஊத்துக்கோட்டை காவல் துறையினர், புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.