பதிவு:2022-09-06 17:57:56
ஆவடி மாநகராட்சியில் புதுமைப் பெண் கல்வி திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 06 : தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆவடி இந்து கல்லூரி வளாகத்தில் புதுமைப் பெண் கல்வி திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து “புதுமைப் பெண்” திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 18 கல்லூரிகளைச் சேர்ந்த 754 மாணவியர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000-ம் வழங்குவதற்கான வங்கி பற்று அட்டை, விழிப்புணர்வு கையேடு மற்றும் உயர்கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி மலர் அடங்கிய தொகுப்புகளை பால்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தை துவக்கி வைத்த நிகழ்ச்சியை ஆவடி இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி மூலமாக பால்வளத்துறை அமைச்சர் நேரலையாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட வசந்தம் நகர் பகுதியில் நீர்வளத்துறை சார்பாக வெள்ளத் தடுப்பு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.21.90 கோடி மதிப்பீட்டில் பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் வெளியேறும் பகுதிகளில் முறையே மூடிய மற்றும் திறந்த வடிவிலான கால்வாய்கள் அமைக்கும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),ச.சந்திரன் ( திருத்தணி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ், ஆவடி மாநகராட்சி துணை மேயர் ச.சூரியகுமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன்,மாநகராட்சி பணிக் குழுத் தலைவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள், கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் சி.பொதுப்பணித்திலகம், மாவட்ட சமூக நல பொறுப்பு அலுவலர், மாநகராட்சி உறுப்பினர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.