பதிவு:2022-04-01 00:31:47
பூண்டி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் ஒழித்தல் மற்றும் குழந்தை உரிமைகள் பாதுகாத்தல் குறித்த பயிற்சி :
திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம்,பூண்டி ஒன்றியத்தில் கல்வியை மையமாக கொண்ட சமுதாய வளர்ச்சி திட்டத்தினை அரசுத்துறைகளுடன் இணைந்து சில்ட்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் ஒழித்தல், குழந்தை உரிமைகள் மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் இணைந்து பயிற்சியினை பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தியது..
நிகழ்ச்சிக்கு பூண்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் தலைமை பேசுகையில் குழந்தை திருமணம் இல்லாத கிராமங்களை உறுதி செய்ய வேண்டும் இதற்கு உள்ளாட்சிகளில் பங்கு இன்றியமையாதது என்றும், பெண் கல்வி குடும்பம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்றும் கூறினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, பெர்னாண்டோ வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்து குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதில் ஊராட்சிகளின் கடமைகளை குறித்து எடுத்து கூறினர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி பேசுகையில்,குழந்தை திருமணத்தை ஒழித்தல், பெண்குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாக உறுதி செய்தல், கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள், குழந்தைகளுடைய புள்ளி விபரங்களைசேகரித்து இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு தொடர்ந்து செல்வதை கண்காணித்தல் மற்றும் உறுதி செய்தல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி,தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்துதல் மற்றும் ஊராட்சிகள் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் மிக சிறப்பான பங்காற்ற முடியும் என்றும் எடுத்து கூறினார்.
பின்னர் முன்னாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பி.செந்தில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான சட்டங்கள்,குழந்தை பாதுகாப்பிற்கு செயல்படுகின்ற அரசு அமைப்புகள் குறித்து பயிற்சியளித்தார்.குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மலர்விழி, மனவள ஆலோசகர் ஜான்சி ஆகியோர் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக செயலர் ஸ்டீபன் இப்பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார், இறுதியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் நன்றி கூறினார்.