பதிவு:2022-09-07 23:42:54
பாலாபுரம் ஊராட்சியில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் செப் 07 : திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாலாபுரம் ஊராட்சியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு பேசினார்.
பாலாபுரம் ஊராட்சியில் புதிதாக 5,000 லிட்ட்ர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் புதிதாக அமைக்கப்பட்டதன் மூலம் 20 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் தரமான பாலை ஒன்றியத்திற்கு அனுப்பி அதற்குரிய விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. பால் பதப்படுத்தும் பணி உடனடியாகவும், எளிமையாகவும் அச்சங்கத்தில் நடைபெறுவதால்; பால் கெட்டு போகாமல் நீண்ட நேரம் பால் பதப்படுத்தப்பட்டு தரமான பால் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. இம்மையத்தின் மூலமாக இப்பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் பால் உற்பத்தி பெருகி பொருளாதாரம் மேம்படைய வழிவகுக்கிறது.
பாலாபுரம் ஊராட்சியின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் பாலானது காக்களுர் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு அவைகள் பால் பாக்கெட்டுகள் மூலமாக பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. இதனால் பால் விரைவில் கெட்டு போவது தடுக்கப்பட்டு சுத்தமான, தரமான தூய பால் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆர்.கே.பேட்டை மற்றும் தும்பிகுளம் ஆகிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.9 இலட்சம் வீதம் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டிலான பால் கேன் குளிர்விப்பான்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் இம்மையத்தில் பால் பகுப்பாய்வு கருவி மூலமாக பாலின் தரத்தை ஆய்வு செய்து, அவ்வாய்வின் அடிப்படையில் பாலின் தரம் குறித்த ஒப்புகை சீட்டுகளை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி, அம்மையத்தில் பால் குளிர்விக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் எம்.பூபதி, காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆவின் பொது மேலாளர் ஐ.ஜெய்குமார், துணை பதிவாளர் (பால்வளம்) சித்ரா, பாலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் லோகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.