பதிவு:2022-09-08 14:15:01
திருவள்ளூரில் சர்வதேச நீல வான தூய காற்று தினத்தை முன்னிட்டு மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 08 : காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆபத்து மற்றும் உலகளவில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய தவிர்க்கக்கூடிய காரணங்களில் ஒன்றாகும் என்பதை அங்கீகரித்தல், உலகம் முழுவதும் சுமார் 6.5 மில்லியன் அகால மரணங்கள் உள் மற்றும் வெளிப்புற காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன.
காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான பொருளாதாரப் பகுத்தறிவு மற்றும் செலவு குறைந்த தீர்வுகள் பல உள்ளன. அத்தீர்வுகளாக, மர எரிபொருள் உபயோகிப்பதைத் தடுத்தல், கருப்பு கார்பன் உருவாகுவதை தடுத்தல், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், மீத்தேன் உருவாகுவதை தவிர்த்தல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், இயன்றவரை அலுவலகத்திற்கு செல்வதற்கு சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும்.
அதனை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச நீல வான தூய காற்று தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக காற்று மாசுபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மிதிவண்டி பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து திருவள்ளுர் இரயில் நிலையம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் மாசு கட்டுப்பாட்டை தடுப்போம், சுத்தமான தூய்மையான காற்றை சுவாசிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மிதிவண்டி பயணத்தை ஊக்குவிப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் மாணவ, மாணவியர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர் கே.ரகுகுமார், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.