பதிவு:2022-09-09 12:20:34
ஆர்.கே.பேட்டையில் உள்ள உரக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர், எல்லாபுரம், மீஞ்சூர் மற்றும் பொன்னேரி வட்டார விவசாயிகள் தங்கள் பகுதி உரக்கடைகளில் உரங்கள் அதிக விலைக்கு விற்பதாகவும், விற்பனை இரசீது வழங்கப்படவில்லை எனவும், உரங்களுடன் சேர்த்து இதர இடுபொருட்களையும் வாங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் உள்ள பாபுலால் உரக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உரக்கடைகளில் இருப்பு வைத்துள்ள உரங்களை இருப்பு பதிவேடு, உழவன் செயலி மற்றும் உர விற்பனை முனைக்கருவி ஆகியவற்றில் சரியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதனை குறுக்காய்வு செய்தார். உரக்கடை உரிமையாளரிடம் உரங்களின் விற்பனை விலை மற்றும் உரங்களுடன் சேர்த்து இதர இடுபொருட்களும் வற்புறுத்தி விற்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த ஒரு உரக்கடைகளிலும் விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்வதும், யூரியா உரங்களுடன் உரம் சார்ந்த இதர இடுபொருட்களையும் வாங்க வற்புறுத்துவதும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட உரக்கடை உரிமையாளரகள்; மீது கடுமையான நடவடிக்கையுடன் உரக்கடை உரிமமும் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக்கடைகளை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் உரங்கள் விலைக்கு வாங்கும் போது உர விற்பனை முனைக்கருவி பட்டியல் இரசீதினை தவறாமல் உரக்கடை உரிமையாளரிடம் கேட்டுப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியரின் திடீராய்வின் போது ஆர்.கே.பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.