பதிவு:2022-04-01 19:21:18
திருவள்ளூரில் முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் புத்தக கண்காட்சி அரங்கிணை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 01: திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுப்பசியை போக்குகின்ற வகையில் மாபெரும் புத்தக திருவிழா 01.04.2022 முதல் 11.04.2022 வரை நாள்தோறும் காலை 11 மணியிலிருந்து மாலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சுமார் 50 முதல் 60 ஆயிரம் வரையிலான தலைப்புகள் கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளன.
மேலும், 11 நாட்கள் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் நாள்தோறும் ஒரு தலைச்சிறந்த தமிழ் சொற்பொழிவாளர்களால்; கருத்துரைகள் வழங்கப்படவும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.மேலும், இந்த புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்குபவர்களுக்கு விலையிலிருந்து 10 சதவிகிதம் தள்ளுபடி செய்து விற்கப்படவுள்ளது.
அதோடு மட்டுமின்றி முதல் 10 ஆயிரம் புத்தகம் வாங்கும் நபர்களுக்கு மரக்கன்றுகளும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட புத்தக கண்காட்சிக் குழு மற்றும் BAPASI இணைந்து நடத்தும் முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் புத்தக கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து, அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு, விற்பனையை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்ட நிகழ்வாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி அரங்கினை பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு துறை சார்பாக தயாரிக்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படத்தை வெளியிட்டு, பொதுமக்கள் பார்வைக்காக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்படுவதை பார்வையிட்டு, அவ்வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தும், பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, அவ்வரங்குகளில் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவியர்களை பாராட்டி,சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண் குமார்,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி ),ச.சந்திரன் (திருத்தணி),துரை சந்திரசேகர் (பொன்னேரி),மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன்,திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.வைரவன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.