பதிவு:2022-09-10 11:49:00
“தடுப்பூசி ஒன்றே தீர்வு” திருவள்ளுர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் : தடுப்பூசி செலுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் :
திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (11.09.2022) 36-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 500 தடுப்பூசி மையங்கள் அமைக்கப் பெற்று 2,000 பணியாளர்கள் மூலம் 55 ஆயிரம் நபர்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் இதுநாள் வரை 35 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 18 லட்சத்து75 ஆயிரத்து 408 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த 18 லட்சத்து 88 ஆயிரத்து 400 பயனாளிகளில் இதுநாள் வரை நடைபெற்ற 35 மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களிலும், மற்றும் நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களிலும் முதல் தவணையாக 18 லட்சத்து 2 ஆயிரத்து 778 (95.5 சதவிகிதம்) நபர்களுக்கும், இரண்டாம் தவணை 16 லட்சத்து 34 ஆயிரத்து 934 (86.6 சதவிகிதம்) நபர்களுக்கும் மொத்தமாக 34 லட்சத்து 37 ஆயிரத்து 712 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கும் கோர்ப்வேக்ஸ் (Corbevax) தடுப்பூசி மற்றும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கும் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கான இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும். அரசு அறிவித்துள்ளப்படி, Covishield மற்றும் Covaxin இரண்டு தவணைகள் நிறைவுற்ற நபர்களுக்கு Covishield மற்றும் Covaxin அல்லாமல் Corbecax தடுப்பூசியை முன்னெச்சரி;க்கை தவணையாக செலுத்தக்கொள்ளலாம்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 18 வயதிற்கு மேல் 59 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 75 நாட்களுக்கு (ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை) கோவிட் 19 முன்னெச்ரிக்கை தடுப்பூசி இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற ஆணையின்படி இன்னும் 21 நாட்களே மீதம் இருப்பதால் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிப்புரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 11.09.2022 நடைபெறும் 36-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் இதுநாள் வரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி “தடுப்பூசி ஒன்றே தீர்வு” என்பதை உணர்ந்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளுர் கலெக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.