பதிவு:2022-09-10 12:08:02
திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறி, பழங்களுக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் குத்தகை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் செப் 10 : திருவள்ளுர் மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழ வகைகள் சுமார் 20,000 ஹெக்டருக்கும் மேலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் வசித்து வரும் சென்னை மாநகராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள மாவட்டமாக திருவள்ளுர் திகழ்வதாலும், காய்கறிகள் மற்றும் பழவகைகள் உற்பத்தி அதிகமாக இருப்பது மற்றும் அனைத்து காய்கறி, பழவகைகளை அனைத்து தரப்பு மக்களுக்கு தேவைக்கேற்ப தரம் பிரித்து, சுத்தம் செய்து இலாபகரமாக சந்தைப்படுத்த சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில் இரண்டு முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் திருவள்ளுர் (ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள்) மற்றும் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி-1 கிராமத்தில் (சர்வே எண். 394) ஆகிய இரண்டு இடங்களில் சுமார் 500 சதுர மீட்டர் அளவிலான தரம் பிரிக்கும் கூடம் மற்றும் குளிர்பதன கிடங்குடன் கூடிய இதர வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இவற்றினை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், தனியார் நிறுவனங்கள், கூட்டு முயற்சி நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர் ஆகியோருக்கு இவ்விரு முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு குத்தகை முறையில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவ்விரு முதன்மை பதப்படுத்தும் நிலையங்களிலும் குத்தகைதாரர் கோரும் குளிர்பதன கிடங்கு வசதி, முதன்மை மற்றும் இரண்டாம் பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மற்றும் தேவைப்படும் இதர வசதிகள் ஆகியவற்றினை அரசு செலவில் செய்து தரப்படும்.
எனவே, இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை குத்தகைக்கு எடுக்க விரும்புபவர்கள் வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்), நேரில் அணுகியோ அல்லது 7708541376,9543960957 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும், ddab.tiruvallur@gmail.com என்ற இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டு இவ்விடங்களை நேரில் பார்வையிட்டு தங்களது விருப்பங்களை சமர்ப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.