பதிவு:2022-09-13 13:53:02
திருத்தணியில் முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடிய வாலிபர் கைது
திருவள்ளூர் செப் 13 : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (71). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி பணம் எடுப்பதற்காக திருத்தணி மா.பொ.சி., சாலையில் உள்ள எஸ்பிஐ., ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது ஏடி.எம்.லிருந்து பணம் வராததால், பின்னால் இருந்த நபர், அவரது ஏடிஎம் கார்டை வாங்கி பாஸ்வேர்ட் நம்பரையும் வாங்கி பணம் எடுத்து தருவதாக முதியவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் பணம் வரவில்லை என்று கூறி அவரது ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்னர் அன்று மாலை கிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 22 ஆயிரம் பணம் எடுத்தது தெரிந்தது. இதேபோல் திருத்தணி அடுத்த பள்ளியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 55). கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி திருத்தணி இந்தியன் ஏடிஎம் வங்கியில் பணம் எடுக்கச் சென்றபோது இதே போல் ஏமாற்றி ரூபாய் 11 ஆயிரம் திருடிச் சென்றுள்ளார்.
இதேபோல் திருத்தணி அடுத்த நல்லாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 67) இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 1- தேதி எஸ்பிஐ., ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க இதேபோல் ஏடிஎம் கார்டு வாங்கிக்கொண்டு வேறு ஏடிஎம் கடை மாற்றி கொடுத்து மர்ம நபர் ரூபாய் 16 ஆயிரம் திருடியது தெரியவந்தது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார், ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகுடல் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சூரிய பிரகாஷ் என தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளியை விரைந்து பிடிக்க திருத்தணி துணை சூப்பிரண்ட் விக்னேஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து திருட்டில் ஈடுபட்ட சூரிய பிரகாஷ் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த சூரிய பிரகாஷை தனிப்படை போலீசார் கைது செய்து திருத்தணிக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட சூரிய பிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.