திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சீட் கிடைக்காத மாணவர்கள் பெற்றோருடன் சாலை மறியல் :

பதிவு:2022-09-13 14:18:41

திருவள்ளூர் செப் 13 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 686 இடங்களுக்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

மதிப்பெண் மற்றும் சமுதாயம் அடிப்படையில் மாணவர்களுக்கு 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்று மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. 60 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நிலுவையில் உள்ள நிலையில் அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாது என்பதால் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும், மாலை நேர கல்லூரி திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி கல்லூரியில் சேர்க்கைக்கு காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவர்களது பெற்றோருடன் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஐந்து கி.மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பயணிகள்,வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். திருத்தணி கோட்டாட்சியர் அஸ்ரத்பேகம், பொறுப்பு துணை கண்காணிப்பாளர் குமரவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.