பதிவு:2022-09-14 11:23:33
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 168 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கான ஆணைகள் : திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :
திருவள்ளூர் செப் 14 : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 168 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வே.ரேவதி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பொ.பூபாலன், இரா.பொன்னுதுரை, பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பத்தூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் சுஜாதா சுதாகர், துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 168 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினார். அதனைத்தொடர்ந்து பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளையும் திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார். மேலும் அந்த பள்ளியில் பயின்று 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்த 3 மாணவர்கள், 3 மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் பாராட்டினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், கடம்பத்தூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், ஹரிகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், நிர்வாகிகள் கோ.அரிதரன், வி.எம்.சுரேஷ், வ.இராஜசேகர், சி.ரவிக்குமார், ந.பிரசன்னகுமார், வா.மாலதிவாசன், ஓவிய ஆசிரியர் சா.அருணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஞா.வினோலினா எப்சிபா நன்றி கூறினார்.