பதிவு:2022-09-14 11:29:38
திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சீனிவாசனுக்கு சொந்தமான தொழிற்சாலை, நண்பர் சபரி எலக்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை :
திருவள்ளூர் செப் 14 : தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றம் திட்டத்தின் மூலம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி 500 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னை கோவை திருச்சி செங்கல்பட்டு தாம்பரம் ஆவடி திருவள்ளூர் உள்ளிட்ட 26 இடங்களில் 100 மேற்ப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த படூர் பகுதியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சீனிவாசனுக்கு சொந்தமான ஏ.சி.இ. டெக் கனரக வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் இரண்டாவது முறையாக சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 4 நாட்களாக விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. சோதனை தொடரும் நிலையில் அதிகாரிகள் வெளியே வரும் போது தான் தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரியும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் உள்ள முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணியின் நண்பர் சபரி எலக்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்பி வேல்முருகன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஞானமூர்த்தி நகர் பவுனம்மாள் தெருவில் சுதன் கன்சக்ஷன் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டில் செந்தில் குமார் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.அதனால் அம்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.