பதிவு:2022-09-14 11:37:07
பூந்தமல்லி அருகே தனியார் நிலத்தில் இருந்த புரட்சி பாரதம் கட்சி கொடியை அகற்ற நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு : புரட்சிபாரதம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று மீண்டும் காவல் துறை உதவியுடன் வருவாய்த்துறை அளவீடு செய்தது :
திருவள்ளூர் செப் 14 : ஓசூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் . சிறு குறு தொழில் செய்து வரும் இவர் பூந்தமல்லி அடுத்த நேமம் என்ற பகுதியில் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு ஒரு ஏக்கர் 19 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரை இடித்துவிட்டு இவரது அனுமதி பெறாமல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ.வுமான ஜெகன் மூர்த்தி கட்சியின் கொடி கம்பம் அமைத்து இருந்தார். அதனால் தனக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கொடி கம்பத்தை அகற்றி தர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மூன்று வார காலத்திற்குள் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி நீதிமன்றம் உத்தரவின் பேரில் பூந்தமல்லி தாசில்தார் செல்வம், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். அப்போது, இந்த கொடி கம்பம் எடுப்பது குறித்து பேசும் போது நிலத்தை அளவீடு செய்ததில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை முறையாக மீண்டும் அளவீடு வேண்டும் என புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தரப்பில் தெரிவித்தனர்.
அதனையடுத்து மீண்டும் நில அளவீடு செய்யவேண்டும் என புரட்சி பாரதம் கட்சி சார்பில் வருவாய்த்துறையினரையும், காவல் துறையினரையும் கேட்டுக் கொண்டதின் பேரில் மீண்டும் நேற்று பூந்தமல்லி தாசில்தார் செல்வம் மற்றும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுத் துறையினர் முழுமையாக அளவீடு செய்தனர். அப்போது, ஓசூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பகுதியில் கொடிக்கம்பம் அமைத்தது நில அளவீடு செய்த பின் உறுதியானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு அளவீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அதன் பிறகே கொடிக் கம்பம் அகற்றுவது குறித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.