பதிவு:2022-09-15 15:32:32
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் பெண் விவசாயிகள் சங்கத்தின் 25 வது மாநில மாநாடு :மாப்பிள்ளை சம்பா கருப்புக் கவினி, சிவன் சம்பா மற்றும் கம்பு கேழ்வரகு சோளம் சாமை திணையுடன் விழிப்புணர்வு
திருவள்ளூர் செப் 15 : தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் களஞ்சியம் பெண் விவசாய சங்கம் கடந்த 2009-ல் தலித் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள நிலமற்ற கூலி விவசாய பெண்களை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம், கூட்டு விவசாயம், சூழியல் விவசாயம், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம், சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், இயற்கை உரம் தயாரித்தல் பருவ நிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய விவசாயம் கடைபிடித்தல் , கால் நடை வளர்த்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் நடத்தும் 25 வது மாநில மாநாடு மற்றும் பெண்களும், நில உரிமைகளும் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் மாநில தலைவி ஷீலு தலைமை தாங்கி துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலா, தொட்டிக்கலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகாயமேரி கனகராஜ், ஆகியோர் வரவேற்றனர்.
இதில் பங்கேற்ற திரளான பெண் விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா,சிவன் சம்பா, கடன் சம்பா ஆத்தூர் கிச்சிலி சம்பா மற்றும் பாரம்பரிய தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம் திணை கொள்ளு காராமணி எள்ளு உளுந்து பாசிப்பயிறு கரும்பு நிலக்கடலை போன்றவற்றை கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.மேலும் பெண்களும் நில உரிமைகள் குறித்து அங்கு கூடியிருந்த பெண் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த பெண் விவசாயிகள் சங்கம் நடத்தும் மாநில மாநாட்டில் 13 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முனைவர் எல்.சுரேஷ், திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அ.அனிதா, கல்பனா கருணாகரன், பியூலா அசரீயா, சாந்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சோழவரம் பானு உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி கௌரி நன்றி கூறினார்.