பதிவு:2022-09-16 13:09:18
மெய்யூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களிடையே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி
திருவள்ளூர் செப் 16 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், மெய்யூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களிடையே சமுதாயத்தில் காணப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடைபெற்ற Collector@School என்ற சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
தமிழக அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகளை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். அதில் நம் திருவள்ளுர் மாவட்டத்திலும் ஒரு மாதிரி பள்ளியை துவக்கி வைத்துள்ளார். அம்மாதிரி பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் அதிகமாக வாங்கக்கூடிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கக் கூடிய ஒரு முயற்சியாகும்.
மேலும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் என்ற வரலாற்று சிறப்புமிகு திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இவைகள் அனைத்தும் மாணவர்களை கல்வியில் சிறந்தோங்க செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி முதல்வர் வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களிடையே சமுதாயத்தில் காணப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதனைத் தொடர்ந்து, போதைப் பழக்கங்களின் தாக்கங்கள் குறித்து திருவள்ளூர் டிஎஸ்பி.சந்திரதாசன், மனநலம் குறித்து நந்தனம் உளவியல் சேவைகள் மைய நிறுவனர் உளவியலாளர் நளினி ஆகியோரும் மாணவ, மாணவியர்களுக்கு கருத்துரைகள் வழங்கினார்.
மேலும், பூண்டி ஊராட்சி ஒன்றியம், மெய்யூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து, அப்பள்ளி வாளகத்தில் மாணவ, மாணவியர்களால் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட கல்வி அலுவலர் (திருவள்ளுர்) ஆ.எல்லப்பன், மாவட்ட கல்வி ஆய்வாளர் சௌத்ரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.