பதிவு:2022-09-17 19:26:58
திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் 3 இரு சக்கர வாகனங்களுக்கு தீவைப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு :
திருவள்ளூர் செப் 16 : திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வி.கே.என்.நகர் முதல் தெருவில் வசிப்பவர் தமிழரசன். இவரது மனைவி மதி. இவர் திருவள்ளூர் மாவட்ட நூலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண், சந்துரு என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழரசன் மற்றும் அவரது 2 மகன்கள் என 3 பேரும் பல்சர், பேஷன் ப்ரோ, யமஹா எம் டி15 என்ற மூன்று இரு சக்கர வாகனங்களை தனித்தனியாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 3 வாகனங்களையும் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டு வாசலில் சத்தம் கேட்கவே எழுந்து வந்து பார்த்த போது 3 இரு சக்கர வாகனங்களும் எரிந்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மளமளவென பரவிய தீயால் சுவற்றில் ஒட்டியிருந்த டைல்ஸ் உடைந்து கீழே விழுந்தது.
இதனையடுத்து 3 இரு சக்கர வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானதையடுத்து தண்ணீரை ஊற்றி மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். ரூ.3.60 லட்சம் மதிப்பிலான மூனு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டின் கேட் பூட்டப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் யாரேனும் சுவர் ஏறி குதித்து தீயிட்டு கொளுத்தினார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.