பதிவு:2022-09-18 08:02:59
ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா மற்றும் 32 கிலோ குட்கா பறிமுதல் : 2 பேர் கைது :
திருவள்ளூர் செப் 16 : தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான திருத்தணி வழியாக ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. காவல் துறையினர் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டாலும், கஞ்சாவை கடத்தி வருபவர்கள் காவல் துறையினரின் கண்களில் படாமல் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் போதைப் பொருட்களான கஞ்சா, குட்கா ஆகியவை கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. பெ.சிபாஸ் கல்யாணுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சிறப்பு பிரிவு காவல் துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த ரயில் திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றபோது சோதனை செய்தனர். அதில் இருந்த இளைஞர் ஒருவரை விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து அவரது பையை சோதை செய்த போது அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவன் கடலூரை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. ஆந்திராவிலிருந்து விற்பனைக்காக கடத்தி வந்து பாண்டிச்சேரி, கடலூர் போன்ற பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த விஜயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் காச்சிகோடா என்ற விரைவு ரயிலையும் சிறப்பு பிரிவு போலீசார் சோதனை செய்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் என்பவர் பையில் 32 கிலோ குட்கா போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சல்மானையும் கைது செய்து 32 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.