பதிவு:2022-09-19 00:09:07
ஆங்காடு பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் உணவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு : ரேஷன் பொருட்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை :
திருவள்ளூர் செப் 16 : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆங்காடு பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நியாய விலை கடைகளுக்கான அரிசி (99 டன்), கோதுமை (3.5 டன்) ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாலையை உணவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆங்காடு பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் அண்மையில் 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியும், 3.5 டன் கோதுமையையும் பொன்னேரி வட்டாட்சியரும், மாவட்ட வழங்கல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் குழுவால் கைப்பற்றி உள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சிஐடி காவல் துறை திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து தொடர்ந்து கூறி வருகின்றனர். கடந்த 1.5 ஆண்டுகளாக ரேஷன் அரிசி கடத்தலில் 11,008 நபர்களும், குறிப்பாக 113 நபர்கள் குண்டர் சட்டத்திலும் அடைத்துள்ளோம். அதுமட்டுமின்றி, பல்வேறு வாகனங்களை பிடித்துள்ளோம்.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மை காலங்களில் 2,962 டன் அரிசி கைப்பற்றியதற்காக 63 குற்றவாளிகளை பிடித்துள்ளோம். இதில் சுமார் 8 நபர்களை குண்டர் சட்டத்தில் அடைத்துள்ளோம். இந்த தனியார் ஆலையில் உள்ள குற்றவாளி தலைமறைவாகி உள்ளார். காவல் துறை உதவியோடு அவரை பிடிக்க முயற்சி மேற்கொண்டு காவல் துறை கண்காணித்து வருகிறது.
அரசு பெரும் புள்ளிகளை முதலில் பிடிக்க வேண்டும். எனவே, பெரும் புள்ளிகளை காவல்துறையால் முழு வீச்சில் தேடப்பட்டு வருகிறது.அண்ணா அந்தியோதயா திட்டத்தில் உள்ளவர்களுக்கு 18 இலட்சத்தில் 35 கிலோ அரிசி இலவசமாக செல்கிறது. மற்றவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ஒரு நபர் இருந்தால் 12 கிலோ, இந்தியாவில் 5 கிலோ, அதுபோல 4 நபர்கள் இருந்தால் 20 கிலோ. அதுபோல் ஒவ்வொரு கூடுதலான நபர்களுக்கும் 5 கிலோ என படிப்படியாக வழங்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடவில்லையென்றால் அரிசி வாங்காதீர்கள். உணவு பாதுகாப்புக்கான ஓர் உன்னத திட்டம் ஆகும்.
அரிசி கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக ஒரு டிஜிபி தலைமையில் நான்கு எஸ்பி, 12 டிஎஸ்பி 24 இன்ஸ்பெக்டர், 57 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 229 நபர்கள் என இப்பணிகளில் 322 ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை இணைக்கும் சாலையான பொன்பாடி, ஊத்துக்கோட்டை, எடவூர் ஆகிய பகுதிகிளில் நேரடி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 16 பிரிவு சாலைகளிலும் பழவேற்காடு கடல்வழி மார்க்கம் போன்ற பகுதிகளில் அரிசி கடத்தலை தடுப்பதற்காக காவல் ரோந்து வாகனங்கள் போன்றவை மூலமாக தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.இதுபோன்ற உணவு கடத்தலில் ஈடுபடுவதும், அத்தகைய செயல்களுக்கு துணை போவது, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஆங்காடு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை உணவுத்துறை அரசு முதன்மை செயலாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து, அவ்வாளகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் இருப்பு வைக்கப்பட்டுள்ள 2,450 டன் தரமான அரிசியின் இருப்பு நிலை குறித்தும், ஊத்துக்கோட்டை சோதனை சாவடி பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நியாய விலை கடைகளுக்கான அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களையும் உணவுத்துறை அரசு முதன்மை செயலாளர் நேரில் பார்வையிட்டு, சோதனை செய்தார்.
இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக காவல் கண்காணிப்பாளர் வி.கீதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.ஜோதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர், நுகர்பொருள் வாணிப கழகம் துணை மண்டல மேலாளர் முனுசாமி, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் சீனிவாசன், துணை பதிவாளர்கள் கருணாகரன் (பொன்னேரி), திருவள்ளு பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் ரவி, ஊத்துக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் டீ.இராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.