பதிவு:2022-09-19 05:37:18
திருவள்ளூரில் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி மற்றும் நடை பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 125 தொழிற்சாலைகளை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மிதிவண்டி மற்றும் நடை பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
செப்டம்பர் 16 ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வருடத்திற்கான கருத்துரு “பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் உலகளாவிய ஓத்துழைப்பு” என்ற கருத்துருவின் அடிப்படையில் ஓசோன் படலத்திற்கு ஒரு முக்கிய பணி உள்ளது. இது சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் பெரும்பகுதியை உறிஞ்சுவதாகும். புற ஊதா கதிர்வீச்சின் அதிகப்படியான வெளிப்பாடு நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புற ஊதா கதிர்கள் சூரிய ஒளி, முன்கூட்டிய முதுமை, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் கண் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. புற ஊதா கதிர்வீச்சு பற்றிய மிகப்பெரிய கவலை புற்றுநோய். மனிதர்கள் மற்றும் விலங்குகள் இருவரும் புற ஊதா கதிர்களின் அதிகப்படியான வெளிப்பாட்டால் புற்றுநோயைப் பெறுகின்றனர்.
மேலும், ஓசோன் படலத்தை காப்பதற்கான வழிமுறைகளான ஓசோன் படலத்திற்கு ஆபத்தான வாயுக்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும், கார்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், பொது போக்குவரத்து சைக்கிள் மற்றும் மின் வாகனங்களை பயன்படுத்துவும், சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். உள்ளுர் பொருட்களை வாங்கவும். இதன் மூலம் அதிக தூரம் அந்த பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ஊர்திகள் காரணமாக அதிக நைட்ரஸ் ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுவதை தடுக்கலாம். குளிர் சாதனப் பொருட்களை (பராமரிக்கவும், அவற்றின் செயலிழப்புகள் (குளோரோ ப்ளோரோ கார்பன் வாயுக்கள்) வளிமண்டலத்தில் வெளியேற காரணமாகின்றன. குளிர்பதனப் பொருட்களின் (ஓசோனை சிதைவுபடுத்தும் பொருட்கள்) சரியாக மீட்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட அதனை ஒரு தொழில்நூட்ப வல்லுநரால் கையாளப்படுவதை உறுதி செய்யவும், மின்சாதனங்களை அப்புறப்படுத்தும் போது குளிரூட்டும் குழாய்கள் சேதப்படுத்தாதீர்கள். எனர்ஜி ஸ்டார் லேபிள்கள் உள்ள உபகரணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹைட்ரோ குளோரோ ப்ளோரோ கார்பன் வாயுக்களை பயன்படுத்தாத குளிர்சாதன உபகரணங்களை பயன்படுத்தவும். சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த அனைவரையும் ஊக்குவிக்கவும் போன்ற வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஓசோன் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழிற்சாலைகளை சேர்ந்த பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.இதில் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் கே.ரகுகுமார், சபரிநாதன், தொழிற்சாலையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.