பதிவு:2022-09-19 13:23:50
திருவள்ளூரில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு :
திருவள்ளூர் செப் 19 : பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எப்.மல்லிகா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் வி.ராஜவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, நீதியியல் அலுவலக மேலாளர் டி.மீனா, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.