பதிவு:2022-09-19 13:26:55
மணவாளநகரில் 37-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் : பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாளநகர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடைபெறும் 37-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார்.
தமிழகமெங்கும் 37-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக சுமார் 350 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 1,400 பணியாளர்கள் மூலம் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த 18,88,400 பயனாளிகளில் இதுநாள் வரை நடைபெற்ற 36 மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களிலும் மற்றும் நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களிலும் முதல் தவணையாக 18,03,987 நபர்களுக்கும், இரண்டாம் தவணை 16,48,048 நபர்களுக்கும் என மொத்தமாக 34,52,035 தடுப்பூசிகள் இம்மாவட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கான இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 18 வயதிற்கு மேல் 59 வயது வரை உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 75 நாட்களுக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை கோவிட்-19 முன்னெச்சரிக்கை தடுப்பூசி; ;இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற ஆணையின்படி இன்னும் 12 நாட்களே மீதம் இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்நுட்ப கூடங்கள் ஆகியவற்றில் பணிப்புரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் 37-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில்; இதுநாள் வரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி “தடுப்பூசி ஒன்றே தீர்வு” என்பதை உணர்ந்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறினார்.
இவ்வாய்வில் திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கு.ரா.ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் மரு.காந்திமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.