பதிவு:2022-09-27 15:16:06
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் செப் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 81 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 47 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 36 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 53 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 77 மனுக்களும்; என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் புரிய வங்கி கடன் பெற்ற 6 நபர்களுக்கு 5 சதவிகித பங்கு தொகையான ரூ.1,05,000-த்திற்கான ஆணைகளையும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதம் தலா ரூ.2000 வழங்குவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.ஜோதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, உதவி ஆணையர் (கலால்) கா.பரமேஷ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.