பதிவு:2022-09-27 15:27:03
11-வது வேளாண்மை கணக்கெடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தல்
திருவள்ளூர் செப் 27 : இந்தியா முழுவதும் வேளாண்மை கணக்கெடுப்பு 1970-71 முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. இக்கணக்கெடுப்பில் கைப்பற்று நிலத்திற்கான நில உபயோகம், பயிர் வகை, நீர் பாசனம், நீர் பாசன ஆதாரம் (பயிர் வாரியாக) நீர் பாய்ச்சப்பட்ட, நீர் பாய்ச்சப்படாத பரப்பு விவரங்கள் மற்றும் குத்தகை போன்ற விவசாயத்தின் அடிப்படை தரவுகள் சேகரிக்கப்படுகிறது. புதிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்களை வகுப்பதற்கும் மற்றும் மதிப்பீடு செய்வதற்கும் வேளாண்மை புள்ளி விவரங்கள் அடிப்படையாக உள்ளதால் இந்த கணக்கெடுப்பு பணி ஓவ்வொரு வருவாய் கிராமத்திலும் நடத்தப்படுகிறது.
தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு 2021-22 (அதாவது 11வது கணக்கெடுப்பு) நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை அனைத்து வருவாய் அலுவலர்களுக்கும் ஆகஸ்ட்-2022 மாத இறுதியில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையால் வழங்கப்பட்டது.
இக்கணக்கெடுப்பு முதன் முறையாக கணினி மயமாக்கப்பட்ட மென்பொருள் செயலியை பயன்படுத்தி கைபேசி, கையடக்க கணினி மற்றும் மடிக்கணினி வழியே மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.
இக்கணக்கெடுப்பில் நில உரிமையாளர் மற்றும் கைப்பற்றுதாரர் எண்ணிக்கை, நில அளவு பிரிவுகள் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் கைப்பற்றுகளின் வகைகள், தனி கைப்பற்று, கூட்டு கைப்பற்று, நிறுவன கைப்பற்று, குத்தகை விவரம், நில பயன்பாட்டு வகை சமூக வாரியான, பாலின வாரியான கைப்பற்றுதாரரின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுப்பாளராக இருப்பார்கள். விவசாய கணக்கெடுப்பின் பொழுது கிராம நிருவாக அலுவலர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தேவையான தகவல்களை வழங்குமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.