காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேர் கைது

பதிவு:2022-09-28 20:50:21



தனியார் தொழிற்சாலை கட்டுவதற்கு இடம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட வேலை பறிப்பு : மூன்று கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேர் கைது

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேர் கைது

திருவள்ளூர் செப் 28 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் வேலை வழங்கியிருந்தது. இந்நிலையில் முதலில் இருந்த நிர்வாகம் கைமாறி பி.சி.ஏ நிர்வாகத்திற்கு சென்றது. தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்ததால் தொழிற்சாலையில் 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் என 172 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்களை புதியதாக வந்த தொழிற்சாலை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.

இதனை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 வருட காலமாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்து பணியாற்றி வந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்களுக்கும் இதுநாள் வரை பணி வழங்க வில்லை.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கடந்த 3 முறை திருவள்ளூர் கோட்டாட்சியர் மகாபாரதி தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம் தரப்பு மற்றும் தொழிலாளர்கள் தரப்பு என இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.சட்ட ரீதியாக வேலை வாய்ப்பு வழங்காவிட்டாலும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் கல்வி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி இதற்கான முடிவை அறிவிப்பதாக தொழிற்சாலை சார்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். வேலை வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் வரையில் போராட்டம் கைவிடப் போவதில்லை என்றும் தொழிற்சாலை நிர்வாக கமிட்டியிடம் நிர்வாகிகள் தரப்பு கூறியதை கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் 15-வது நாளாக நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து இரவும் தொடர்ந்தனர்.இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.இரவு நேரத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை தொடர்ந்ததால் மாவட்ட எஸ் பி பா சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சந்திர தாசன் மேற்பார்வையில் மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள், 51 ஆண்கள் என 66 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.