பதிவு:2022-09-28 20:53:12
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலிருந்து அறுவை சிகிச்சை செய்த பெண்களை 102 தாய் சேய நல வாகனத்தில் கொண்டு சென்று நடு ரோட்டில் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் : சுகாதார துறையின் அலட்சியத்தால் பொது மக்கள் அவதி
திருவள்ளூர் செப் 28 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட கூனிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் என்பவரது மனைவி சந்தியா. இவர் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது பின்னர் மூன்று தினங்கள் கழித்து நேற்று காலை அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்த பெண்ணை வாகன பற்றாக்குறை காரணமாக ஒரு மணி அளவில் தாய் சேய் நல வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.
அவருடன் செவ்வாப்பேட்டை திருநின்றவூர் செங்குன்றம் ஊத்துக்கோட்டை கூனிப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து பெண்களை ஒரே வாகனத்தில் ஏற்றி அனுப்பியுள்ளனர். அந்த வாகன ஓட்டுநர் ஒருவரை கூட வீட்டின் அருகே இறக்கிவிடாமல் அந்தந்த பகுதி நெடுஞ்சாலைகளில் இறக்கி விட்டுள்ளார் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் தங்களுக்கு வலி அதிகமாக உள்ளதாகவும் நடு ரோட்டில் இறக்கினால் எப்படி செல்ல முடியும் என கேட்டதற்கு எனக்கு பசி, நான் சாப்பிட வேண்டும் உங்களுக்காக நான் நேரத்தை வீணடிக்க முடியாது என சொல்லிவிட்டு ஈவு இரக்கமில்லாமல் பேசி அந்தந்த பகுதிகளில் விட்டுச் சென்றுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் என்று கூட பாராமல் வாகனத்தை அசுர வேகத்தில் ஓட்டியுள்ளார்.
இதனால் பெண்கள் வலியால் துடித்து கதறியுள்ளனர். இருந்தாலும் வாகன ஓட்டுனர் இது குறித்து எவ்வித கவலையும் படாமல் வேகமாக வந்து அந்த நெடுஞ்சாலையில் இறக்கி விட்டுள்ளார். இதில் கூனிப்பாளையத்தை சேர்ந்த சந்தியா என்பவரை அந்த கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் முன்பாக உள்ள சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து அவர்கள் வழி தெரியாமல் தவித்து பின்னர் ஆட்டோவை பிடித்து தங்களது வீடுகளுக்கு போய் சேர்ந்துள்ளனர். அதேபோல் ஊத்துக்கோட்டை சேர்ந்த பெண்மணியையும் சீத்தஞ்சேரியிலேயே இறக்கி விட்டுள்ளார் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி சந்தியா கூறும்போது எங்களை மருத்துவமனை நிர்வாகம் காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்தது.
ஆனால் வாகனம் இல்லாததால் நாங்கள் சாப்பிடாமல் வாகனம் வரும் என காத்திருந்த நிலையில் ஒரு மணிக்கு வந்த வாகன ஓட்டுனர் என்னுடன் சேர்த்து நான்கு பெண்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று கடைசியில் மூன்று மணிக்கு மேல் எங்களை சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் இறக்கி விட்டனர் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு செல்ல வேறு ஆட்டோவை பிடித்து சென்றோம் மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் அசுர வேகத்தில் வந்ததால் எங்களுக்கு வலி அதிகமாகி வாகனத்தில் கதறி, பொறுமையாக போக சொன்னாலும் ஓட்டுநர் அதை காதில் வாங்கவில்லை என்றும் அதனால் வலி அதிகமாக உள்ளது என்றும், இது போன்ற பெண்களின் சிரமத்தை பாராமல் ஈவு இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட தாய் சேய் நல வாகன ஓட்டுனர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுபோல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களை நடுவழியில் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.