பதிவு:2022-09-29 10:02:31
பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 718 பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் செப் 29 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 17 பயனாளிகளுக்கு 1000 வீதம் 17 ஆயிரம் மதிப்பீட்டிலும், கிராம நத்தம் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 225 பயனாளிகளுக்கு 2 கோடியே 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்திந் கழ் 8 பயனாளிகளுக்கு 7750 ரூபாய் வீதம் 62 ஆயிரம் மதிப்பீட்டிலும், பேட்டரி பவர் ஸ்பிரேர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிக்கு 9 ஆயிரம் மதிப்பிலும், வேளாண் துறையின் நலத்திட்ட உதவிகள் (நாற்றுகள், விதைகள்) 6 பேருக்கு 1650 வீதம் ரூ.9800 மதிப்பிலும்,மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெறும் பயனாளிகள் என 3 பேருக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் என பல்வேறு துறைகளின் சார்பாக 718 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
பூண்டி கிராமத்தில் இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 718 பயனாளிகளில் 225 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படுகிறது என்பதையும் மகிழ்ச்சிகரமான விஷயமாகும்.
கடந்த ஆண்டு வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். அன்று வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கைகள் என்பது பட்டா தொடர்பானதாக தான் இருந்தது. விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்கள் குறிப்பாக ஏழை-எளிய மக்கள், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என திருவள்ளுர் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தெரிவித்தார்கள்.
இதற்கு ஒரு மாதம் முன்பு பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 250 பயனாளிகளுக்கு தொடுகாடு என்ற கிராமத்தில் பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். அதற்கு அரசின் ஆணையை எதிர்பார்த்திருக்கிறோம். அரசானை வந்த பிறகு அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைள் எடுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தது போன்று 1200 இலக்கு வைத்து, அதில் 800-850 இலக்கை எய்திருக்கிறோம். மீதமுள்ள இலக்குகளை முடிப்பதற்கு இருமாத காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்துமே மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்படும் என்ற விவரத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
முன்னதாக பூண்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூண்டி ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கட்ரமணா, துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், திமுக பூண்டி ஒன்றிய செயலாலர் கிறிஸ்டி என்கிற அன்பரசு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோதிலால், பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ், திருவள்ளூர் வட்டாட்சியர் எஸ்.மதியழகன், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன், துணை வட்டாட்சியர்கள் அருணா, சுந்தர், ஜெயஸ்ரீ, சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் சுதா, தினேஷ், வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சென்றான்பாளையம் சேகர், விமலன், குமரேசன், அன்பரசு, நந்தகோபால் சக்திவேல், உதயா, ஜெர்சி வைலட், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.