பதிவு:2022-09-29 10:07:02
குருபுரம் கிராமத்தில் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 29 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், குருபுரம் கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பணிகளை துவக்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த காரீப் கொள்முதல் பருவத்தில் அரசு கட்டிடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ரூ.228 கோடி தொகையில் 1,11,225 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,942 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை தரமான அரிசியாக்கி 75,000 மெட்ரிக் டன் பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நடப்பு சொர்ணவாரி கொள்முதல் பருவத்தில் 25,340 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை நடைபெற்று வருகின்ற நிலையில், அரசு கட்டிடங்களில் மட்டுமே 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்;கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு இதுவரை 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல் ரூ.2160-ற்கும், பொது ரக நெல் ரூ.2115-ற்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விரைவில் துவக்கப்படும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டம் குருபுரம் கிராமத்தில் முதல் முறையாக 5 ஏக்கர் பரப்பளவில் 35,000 மெ.டன் நெல் மணிகள் சேமித்து வைப்பதற்கான திறந்தவெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்மணிகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன.
வருடத்திற்கு மூன்று பருவங்களிலும் மொத்தமாக சுமார் 1,11,225 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நிலையில், நெல் சேமித்து வைக்க இந்த நிரந்தர சேமிப்புக் கிடங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டொண்டிற்கு 20,000 முதல் 25,000 விவசாயிகள் பயனடைவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நிரந்தர திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கு பால்வளத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்து, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி),மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.