பதிவு:2022-09-29 10:12:47
ஏகாட்டூர் கிராமத்தில் "பசுமை தமிழகம்" திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் செப் 29 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஏகாட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக "பசுமை தமிழகம்" திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மரக்கன்றுகளை நடவு செய்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் “பசுமை தமிழகம்" என்ற திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் தமிழ்நாடு முழுவதும் நடப்படுவதற்கு அறிவுறுத்தியுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களை பசுமை - தூய்மை கிராமங்களாக மாற்றும் “நம்ம ஊரு சூப்பரு" என்ற இயக்கம் நடைபெற்று வருகிறது. இவ்வியக்கத்தின் கீழ் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 முடிய மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு முயற்சியாக மாவட்டம் முழுவதும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 2 இலட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படவுள்ளதைத் தொடர்ந்து ஏகாட்டூர் ஊராட்சியில் ஸ்ரீ தேவிக்குப்பம் பகுதியில் 800 பல்வகை மரக்கன்றுகள் மூன்று பிரிவுகளாக நடவு செய்யும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. அவை அசோகா - 200 எண்ணிக்கை, நாவல் - 200 எண்ணிக்கை, நீர்மருது - 100 எண்ணிக்கை, பாதம் - 100 எண்ணிக்கை, பலா - 120 எண்ணிக்கை, அத்தி - 20 எண்ணிக்கை, கொய்யா - 20 எண்ணிக்கை, மா - 20 எண்ணிக்கை, செர்ரி - 10 எண்ணிக்கை, மல்பேரி - 10 எண்ணிக்கை ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, துவக்கி வைக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இம்மாவட்டத்தில் 526 கிராம ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட 356 இடங்களில் 2,00,840 மரக்கன்றுகள் ரூ.654.73 இலட்சம் மதிப்பீட்டில் 8,368 மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணியாளர்கள் மூலம் நடவு செய்யப்படும் பணி துவக்கி வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக வீடுகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை பணித்தளங்களில் பசுமைவேலி அமைக்கப்படுவதோடு மரக்கன்றுகள் நட்டு அரசு நிலங்கள் மேம்பாடு செய்யப்படும். அரசு புறம்போக்கு தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு பசுமையாக மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி),டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி),மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.