திருத்தணி அருகே திமுகவைச் சேர்ந்த லட்சுமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் : ஊராட்சி மன்ற தலைவர் வராததால் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு

பதிவு:2022-10-11 09:30:25

திருவள்ளூர் அக் 11 : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்டவர் திமுகவைச் சேர்ந்த வேலன் என்பவரின் மனைவி கங்கா (65). துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் குமரவேலன். ஊராட்சி மன்ற தலைவர் எவ்வித பணிகளை செய்வதில்லை என்று கூறப்படுகிறது. ஊராட்சியில் உள்ள எல்லா பணிகளையும் துணைத் தலைவர் தான் கவனித்து வருகிறார். தலைவராக இருக்கும் கங்கா ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் வருவதில்லை.

இது தவிர ஊராட்சி செயலர் (பொறுப்பு) விஜயகுமார் சரியாக அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து லட்சுமாபுரம் கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் கனகம்மாசத்திரம் போலீசார், திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால், அதிகாரிகள் சமரசத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என ஆவேசமாக கூறினர். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் தலைவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வராததால் அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டு போட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதற்கு அதிகாரிகள் மறுத்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் ஊராட்சி செயலாளர் விஜயகுமாரை வரவழைக்கப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது