பதிவு:2022-10-11 09:33:24
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் அக் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 69 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 36 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 79 மனுக்களும் என மொத்தம் 255 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.900 வீதம் ரூ.22.50 இலட்சம் மதிப்பீட்டில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைத்து பயன்பெற ஏதுவாக ஆறு வகையான காய்கறி விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்கள் அடங்கிய பெட்டகங்களை 250 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து, இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் உத்தரவின்படி, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியில் 100 சதவிகிதம் பூர்த்தி செய்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பணியை பாராட்டி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அவ்வலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மனவளர்ச்சி குன்றிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான நிர்மயா காப்பீட்டு அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.ஜோதி, தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.