பதிவு:2022-10-12 11:47:59
திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்
திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகளாக அரசு அலுவலர்கள் வட்ட அளவில் ஆய்வு கூட்டங்களை நடத்தி பருவமழை காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கள ஆய்வு செய்து, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்பதையும், இதுபோன்ற காலங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்குவது குறித்து முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டும், வடகிழக்கு பருவமழை காலத்தில் எவ்வித பாதிப்புமின்றி மக்களை காக்கின்ற அலுவலர்களாக நீ;ங்கள் செயல்படுமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு துறை அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கப்பட்டன.
மேலும் அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேருராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை (பராமரித்தல் கட்டுமானம் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு) அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், சுகாதாரத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை துறை, போக்குவரத்து துறை, வனத்துறை, முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள், ஆவின், மோட்டார் வாகன பராமரிப்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), க.கணபதி (மதுரவாயல்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சசிகலா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், திருவள்ளூர் சார் ஆட்சியர் மகாபாரதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜேசுராஜ், உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.